சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
இங்கு தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால ஓடுகள், எலும்புகள், நெல்மணிகள், இரும்பாலான பொருட்கள், கத்திகள், தமிழ் பிராமி எழுத்துகள், கீறல்கள், குறியீடுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சிவகளை, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் 18 குழிகள் தோண்டப்பட்டு, 40 பணியாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிய ஆய்வு செய்வதற்கு மத்திய தொல்லியல் துறை 6 இடங்களுக்கு அனுமதி அளித்ததன் பேரில், தற்போது பராக்கிரமபாண்டி திரடு, ஆவரங்காடு திரடு, செக்கடி திரடு ஆகிய 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிவகளை பரும்பு, பேட்மாநகரம், ஸ்ரீமூலக்கரை பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த முதுமக்கள் தாழிகளை திறந்து அதில் கிடைக்கக்கூடிய எலும்பு மற்றும் மண்டை ஓடுகள் போன்றவற்றை எடுத்து மரபணு சோதனை செய்வதற்காக இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் டாக்டர் குமரேசன் நேற்று வந்தார். அவரது முன்னிலையில் தொல்லியல் துறையினர் சிவகளை பரும்பு பகுதியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து, அதில் இருந்த சிறு, சிறு எலும்புகள், எலும்பு துகள்கள் உள்ளிட்டவற்றை சேகரித்தனர். இதேபோல் மற்ற முதுமக்கள் தாழிகளும் திறக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேராசிரியர் குமரேசன் கூறுகையில் :
‘சிவகளை பரும்பில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து வருகிறோம். அதில் உள்ள பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் எலும்பு மற்றும் காரணிகள், உயிர் மரபியல் சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பரிசோதனை நடத்தப்படும். அதன் முடிவில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் காலங்கள் கண்டறியப்படும்’ என்றார்.
இந்த ஆய்வின்போது, சிவகளை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், கொற்கை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை, சிவகளை ஆசிரியர் மாணிக்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.