• vilasalnews@gmail.com

இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம்!

  • Share on

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள் அரசு மானியம் பெறலாம் என ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் சுமார் 2500 ஏக்கரில் நடப்பு கார் பருவ நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நெல் நடவு செய்ய வேலையாட்கள் தட்டுப்பாடு மற்றும் கணிசமாக உயர்ந்துள்ள நடவு கூலி ஆகியவற்றால் சாகுபடி செலவு இரு மடங்காகிறது. எனவே செலவைக் குறைக்கும் வகையில் நெல் நாற்றுகளை இயந்திர நடவு தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள்  நடுவை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு எக்டேர் நடவு செய்வதற்கு 2.5 சென்ட் அளவு பாய் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. பாய் நாற்றங்காலில் விதைத்த 12 முதல் 15 நாள் வயதுடைய நாற்றுகளை வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்திடவேண்டும். இவ்வாறு இயந்திர நடவு செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக பரப்பு நடவு செய்யலாம். பாரம்பரிய நடவால்  ஏற்படும் செலவை விட இயந்திர நடவு செய்திட செலவு வெகுவாக குறைகிறது.

மேலும் இயந்திர நடவு மூலம் வீரியமான நெல் நாற்றுக்கள், சீரான பயிர் இடைவெளி, பரிந்துரைக்கப்பட்ட பயிர் எண்ணிக்கை, அதிகமான தூர் பிடிப்பு, சீரான முதிர்ச்சி ஆகியன உறுதி செய்யப்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனை ஊக்குவித்திடும் பொருட்டு நெல் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் ஒரு எக்டருக்கு ரூ.5ஆயிரம் நடவு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 

மேற்கண்ட மானிய தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே இயந்திர நடவு செய்து மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இயந்திர நடவிற்காக மானியம் பெற்று சாகுபடி செலவைக் குறைத்து அதிக லாபம் பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நடவு முடிந்து தூர்க்கட்டும் பருவத்தில் உள்ள குறிப்பாக நெல் நேரடி விதைப்பு வயல்களில் துரிதமான வளர்ச்சி மற்றும் அதிகப்படியான தூர்  பிடித்தல் ஆகியவற்றை உறுதி செய்திட கோடை பருவ நுண்ணூட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியம். இதற்காக நெல் நுண்ணூட்ட உரம் தேவையான அளவு அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது . தேவைப்படும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அதில் கூறியுள்ளார்.

  • Share on

வேப்பலோடை கிராமத்தில் 39 ஆடுகளை திருடியவர் கைது!

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், பாதுகாப்பு பணிகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு!

  • Share on