தூத்துக்குடியில் சாய்ந்த நிலையில் இருந்த 355 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ஞானேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான பராமரிப்பு பணிகள் கடந்த 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடந்தன. இதில் 39 துணை மின் நிலையங்கள், 273 மின்பாதைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 39 துணை மின் நிலையங்களில் உள்ள ஆற்றல் மின்மாற்றிகள், மின்னூட்டிகள், ரிலேக்கள், காற்றுதிறப்பான்கள், மற்றும் அலுமினிய பஸ்பார்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 273 மின் தொடர்களிலும் உள்ள மின்கம்பங்களில் செடி, கொடிகள் அகற்றப்பட்டு மின்பாதையின் வழித்தடங்கள் சரி செய்யப்பட்டன.
இந்த மின் பாதைகளில் சேதமடைந்து இருந்த 87 மின்கம்பங்கள், 840 பழுதடைந்த இன்சுலேட்டர்கள் சரி செய்யப்பட்டு உள்ளன. சாய்ந்த நிலையில் இருந்த 355 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. தொய்வாக இருந்த மின்பாதைகளில் 143 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன.
மின்பாதைகளில் இருந்த 950 இழுவை கம்பிகள் சீர் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 176 இடங்களில் மின்பாதைகளுக்கு அடியில், உராயும் நிலையில் இருந்த மரக்கிளைகள் அகற்றி சரி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.