தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 10ம் தேதி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், உட்பட 6 இடங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி குமார் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் வருகிற 10.07.2021 அன்று மாநிலம் முழுவதும் சிறு சிறு அளவில் ("State Wide Micro Level National Lok Adalat") தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது, மேற்படி மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாக முடிக்கப்படும் வழக்குகளில் அன்றைய தினமே தீர்ப்பு பிறப்பிக்கப்படும்.
அத்தீர்ப்பின் மீது மேல் முறையீடு கிடையாது, நீதிமன்ற முத்திரை கட்டணம் கிடையாது. வழக்கு தரப்பினர்களின் எவருக்கும் தோல்வி கிடையாது. வழக்கு இடையேயான கருத்து வேற்றுமை நீங்கி அனைவருக்கும் வெற்றி என்ற நிலை ஏற்படுகிறது. கால விரையம் தவிர்க்கப்படுகிறது.
எனவே வருகிற 10.07.2021 அன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் இயங்கிவரும் நீதிமன்ற வளாகங்களில் வைத்து சிறு சிறு அளவில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள மக்கள் நீதிமன்றத்தில், பொதுமக்கள், வழக்காடிகள் வழக்கறிஞர்கள், வங்கித்துறையினர், காப்பீடு நிறுவனத்தினர், காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினர் கலந்து கொண்டு தங்களுடைய வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக பேசி தீர்வு கண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.