முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தங்கையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேரந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் மாலை ராஜா (22), மகள் கவிதா (17) ஆவர். நேற்று (29.06.2021) கவிதாவின் சகோதரரான மாலைராஜாவிற்கும் கவிதாவிற்கும் செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டு கவிதா செல்போன் தர மறுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மாலைராஜா கவிதாவை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவிதா பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தலைமறைவான கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கவிதாவின் சகோதரர் மாலைராஜாவை வல்லநாடு மலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.