தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (29.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், இன்னும் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவத்துறையின் மூலம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள விபரங்களையும், கொரோனா தடுப்பு விபரங்களையும் ஆய்வு செய்தார். மேலும், ஸ்ரீவைகுண்டம் வட்ட அளவில் வட்டாட்சியர் மூலம் வழங்கப்படும் சான்றுகள் குறித்தும், வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது குறித்தும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்தும், வழங்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் அனைத்து பகுதியிலும் தடுப்பூசி போடும் பணிகளும், வளர்ச்சி பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றிய அளவில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளில் தொய்வு உள்ளது. எனவே பணிகளை விரைவில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தனியாக முகாம் நடத்த வேண்டும். அதில் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று அவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்த்து ஏழை, எளிய மக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை தேவைகளுக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்து மதிப்பீடு தயார் செய்து தெரிவிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மாவட்ட ஆட்சியர் மூலம் பல்வேறு நிதிகளை பெற்று பணிகளை விரைந்து முடிக்கலாம். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்களை பாதுகாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளிலும் தேர்தல் அறிக்கையின்போது தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் உங்கள் தொகுதியில் முதல்வர் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24 மணி நேரமும் தமிழக வளர்ச்சிக்காக சுறுசுறுப்பாக இயங்குவதை போல அலுவலர்களும் மக்களின் நலனுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தாய் - தந்தையரை இழந்த செல்வி.பேச்சியம்மாள் (எ) பிரியா அவர்கள், உதவி ஆட்சியரிடம் (பயிற்சி) வேலை வேண்டி மனு கொடுத்துள்ளார். அவருக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவரது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்கும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான கடிதத்தினை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வக்குமார், தி.மு.க.மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சண்முகத்தாய், முக்கிய பிரமுகர்கள் கொம்பையா, ராமஜெயம், எஸ்.ஜெ.ஜெகன், உதவி செயற்பொறியாளர் கவுதமன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினேஷ், சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.