தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்ட இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜோனாதன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47 ) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த 11ம் தேதி மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பதும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனாதன் தோர்னை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ஜோனாதன் தோர்ன் தனக்கு ஜாமீன் வழங்க கோரி தூத்துக்குடி முதலாவது ஜே.எம்.கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட் ராஜ குமரேசன் முன்னிலையில் நடந்தது.
மாஜிஸ்திரேட் விசாரித்து ஜோனாதன் தோர்ன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே ஜோனாதன் தோர்ன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் கியூ பிரிவு போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.