தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா 2016ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின் பாஜகவில் இணைந்த அவர் 2018ல் டாக்டர் ராமசாமி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் டெல்லி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சசிகலா புஷ்பா, ராமசாமி இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி அவர்களின் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கணவன்-மனைவி இடையே பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் அவர்கள் மீதான போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.