கொரோனா விதிமுறைகளை மீறி, விளாத்திகுளத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ரூபம் வேலவன் உள்பட 80 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசியலை விட்டு விலகப்போவதாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் பல தொண்டர்களிடம் போனில் பேசி வருகிறார். அவர் பேசும் ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதையடுத்து, “சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியை விட்டு நீக்கவேண்டும்” என அதிமுகவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பலரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தது நீக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அதையையும் மீறி தொண்டர்கள் சசிகலவிடம் பேசி வருகின்றனர். ”என்ன ஆனாலும் சரி புரட்சித்தலைவர், அம்மா காலத்து அதிமுகவை மீண்டும் கொண்டு வருவேன். தொண்டர்களின் விருப்பத்தின்படி செயல்படுவேன். கொரோனா முடியட்டும். தொண்டர்களை வந்து சந்திப்பேன். என்னை நம்பின யாரையும் கைவிட மாட்டேன்” என தொடர்ந்து பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம் வேலவன் என்பவர் அதிமுக ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்க கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவதற்கு கண்டிக்கத்தக்கது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அதிமுகவின் பெயரை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலா அமமுகவிற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அமமுக கட்சியின் பொதுச் செயலாளராக தினகரன் இருக்கிறார்.
அவர் ஒப்புதல் இருந்தால்தான் அங்கும் செயல்பட முடியும். அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும். அதிமுக பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப் பட்டுள்ளது” என்று கூறுகிறார் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தடையை மீறியும், அனுமதி பெறாமலும் கூட்டம் நடத்தியதாக ஜெ., பேரவையின் இணைச் செயலாளர் ரூபம் வேலன் உள்ளிட்டர் 80 பேர் மீது விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.