தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இறை வழிபாடு செய்வதற்கு தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திட வேண்டுமென்று ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கமானது நமது நாட்டில் பரவிடாமல் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கைகள் அனைத்தையும் மனமுவந்து பாராட்டி மகிழ்கிறேன்.
நமது இந்திய திருநாட்டை பொறுத்தவரை இறை வழிபாடு என்பது மக்களின் வாழ்வில் கலந்துவிட்ட பாரம்பரியமாகும். இதற்கேற்ப அனைத்து மத மக்களும் தங்களின் இறை வழிபாட்டை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மத கோவில்களும் நிறைந்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுத்திட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் இருந்து கோவில்களில் இறைவழிபாடு என்பது இல்லாமல் போய் விட்டது. ஒருசில முக்கியமான கோவில்களில் மட்டுமே இந்துசமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதல்படி, பக்தர்கள் யாரும் இன்றி இறை வழிபாடு நடந்து வருகிறது. மற்ற கோவில்களில் ஊரடங்கு உத்தரவால் இறை வழிபாடு இல்லாத நிலையே உள்ளது.
பொதுவாக கோவில்களில் இறைவனுக்கு தினம்தோறும் பூஜைகளுடன் இறை வழிபாடுகள் தவறாமல் நடைபெறவேண்டும் என்பதே ஆகம விதியாகும்.
இதனைத்தான் எமது முன்னோர்களான சித்தர்கள், கோவில்களில் இறைவனுக்கு பூஜைகள் இல்லாமல் போனால் நோய்-பிணி போன்ற ரோகமும், மலர்கள் அணிவிக்கா விட்டால் குலம் அழிதலும், சந்தனம் இல்லையெனில் தீராதநோயும், அபிஷேகங்கள் இல்லையெனில் துயரமும், அலங்கார-ஆராதானைகள் இல்லையெனில் மனத்துயரமும், தீபங்கள் ஏற்றவில்லை எனில் செல்வங்கள் இல்லாமல் போதலும், நெய்வேத்தியங்கள் இல்லை எனில் உணவு பஞ்சமும், மந்திர வழிபாடுகள் இல்லை எனில் தரித்திரம்-தீய பலன்களும் ஏற்படும் என்றும் அதனால் சிவாச்சார்யர்கள், அர்ச்சகர்கள், பூஜாரிகள் தினமும் தவறாமல் இறை வழிபாட்டினை ஆகமவிதிப்பதி செய்திடவேண்டுமென்று தெளிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வாரங்களாக கோவில்களில் இறை வழிபாடு என்பது இல்லாமல் இருப்பது மனதிற்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
தற்போதைய சூழலில் தமிழக அரசு கொடிய நோய் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் சிறப்பாக எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்திட இறைவன் அருள் கண்டிப்பாக வேண்டும். ''இறைவன் அருள் இருந்தால் எமனையும் வென்று விடலாம்'' என்பது சித்தர்களின் கூற்றாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் தலைமையிலான அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்து வருகிற நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் பொதுப்போக்குவரத்து நடைமுறைக்கு வந்துள்ள சூழலில் கோவில்களில் இறை வழிபாடு இல்லாமல் இருப்பது சரியானதல்ல.
ஆகவே, தமிழக முதல்வரான தாங்கள் இதில் உரிய கவனம் செலுத்தி இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக அனைத்து கோவில்களிலும் நாள்தோறும் இறைவழிபாடுகள் தவறாமல் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தாங்கள் கோவில்கள் மேம்பட ஏதுவாக இந்துசமய அறநிலையத்துறை மூலமாக பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மனமுவந்து வரவேற்கிறேன்.
எனவே, ஆகம விதிப்படி அரசின் வழிகாட்டுதல்கள்படி அனைத்து கோவில்களிலும் நாள்தோறும் இறை வழிபாடுகள் தவறாமலும், எந்தவிதமான தடைகளும் இன்றி நடைபெறவும், இதன்மூலமாக அனைத்து மக்களும் நோய்கள் இன்றி நலமாகவும், வளமாகவும் வாழ்வதற்கு ஏதுவாக உடனடியாக இறை வழிபாடு செய்வதற்கான உரிய உத்தரவினை தாங்கள் பிறப்பித்து ஆன்மிக அன்பர்கள், பக்தர்களின் மனக்குறையினை போக்கிடவேண்டும் என்று தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.