திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டியும், சட்டசபையில் ஜெய்ஹிந்த் குறித்த அவரது கருத்தை அவை குறிப்பில் இருந்து அகற்ற வேண்டியும், இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழக சட்டசபை கடந்த 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதுகுறித்துப் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்று இல்லாமல் இருப்பதால் தமிழகம் தலைநிமிர்ந்தது என்றார்.
இந்த வார்த்தையால் இந்திய ஒற்றுமையையும் இறையாண் மையையும் கலங்க படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளையும் அசிங்கப்படுத்தி உள்ளார். இதுபோன்று சிந்தனை உள்ளவர்களால் இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடும்.
ஆகவே திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் சட்டசபையில் ஜெய்ஹிந்த் குறித்த அவரது அவதூறு கருத்தை அவை குறிப்பில் இருந்து அகற்றவேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது