தூத்துக்குடி அருகே குடும்ப தகராறில் கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே உள்ள கீழ பூவாணி கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன் (56). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). இந்த தம்பதியருக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, பேச்சியம்மாள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மாரியப்பன், அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பேச்சியம்மாள் அங்கு கிடந்த கற்களாலும், கம்பாலும் மாரியப்பனை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மணியாச்சி போலீசார் கொலை வழக்கு பதிந்து பேச்சியம்மாளை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.