சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்கள் வாழ்ந்த வாழ்விடங்களை அறியும் வகையில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை அதிகாிகள் தொிவித்துள்ளனா்.
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மட்பாண்ட பொருட்கள், மண்பானைகள், பானை ஓடுகள், கிண்ணங்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தமிழ் பிராமி எழுத்துகள், கீறல்கள், குறியீடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டன.
தற்போது 2-வது கட்டமாக ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கொற்கையில் முதல் கட்டமாக அகழாய்வு நடந்து வருகிறது. சிவகளையில் 15 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிவகளையில் அகழாய்வின்போது ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் சுமார் 2 அடி முதல் 4 அடி உயரம் வரையிலும் உள்ளன. இவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் சேதமடையாமல் மூடியுடன் முழுமையாக உள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் உற்சாகம் அடைந்த தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரையிலும் சுமார் 40 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இங்கு ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றை விரைவில் திறந்து பார்த்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் பழங்காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்கள் வாழ்ந்த வாழ்விடங்களை அறியும் வகையிலும் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வு பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்