தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி அசோக் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரவி (50) இவரது மனைவி மாலா (49). இவருக்கும் தூத்துக்குடி பி&டி காலனியைச் சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ரவி, இருவரையும் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சூசை மச்சாது மற்றும் அவரது மகன் கெர்பின் (19), ஆகியோர் ரவியின் வீட்டிற்கு வந்து மாலாவுடன் பேசிக் கொண்டிருந்தார்களாம்.
அப்போது அங்கு வந்த ரவி ஆத்திரத்தில் அவர்களிடம் தகராறு செய்து, வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து மாலா, சூசை, மற்றும் கெர்பின் மீது ஊற்றியுள்ளார். இதில் கெர்பின் மற்றும் சூசை மச்சாது ஆகியோர் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ரவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.