தூத்துக்குடியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்த காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சேவியர் மகன் ஜாக்சன் (24) என்பவர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமறைவாக உள்ள மேற்படி ஆயுதப்படை காவலர் ஜாக்சனை உடனடியாக கைது செய்யுமாறு திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்க்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், மேற்படி ஆயுதப்படை காவலர் ஜாக்சனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.