தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையை மீண்டும் நடத்தக் கோரி மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தூத்துகுடியில் எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையை மீண்டும் நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து தமிழக அரசிற்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் அக்டோபர் 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
தேசிய மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது ஏற்கத்தக்கதல்ல, எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்." என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், எந்தவித ஆயுதமும் இன்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது, ஒரு நாகரிகமான சமுதாயத்தில் இது ஏற்புடையதா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மை செயலர் அறிக்கை இரண்டையும் சீல் ஈட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.