எட்டயபுரம் அருகே பைக் விபத்துக்குள்ளாகி கணவன் - மனைவி கீழே விழுந்த நிலையில் அவர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர் மங்களத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கண்ணன் (56). இவரது மனைவி வாணி (45). இவர்கள் இருவரும் இன்று(23.6.2021) காலை 11 மணியளவில் பைக்கில் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். புதுப்பட்டி அருகே சென்றபோது, எதிரே விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி மகன் மகாராஜன் (23) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி தம்பதியர் மீது மோதியது. இதில் வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கண்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த மகாராஜன் படுகாயம் அடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.