தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடியிலுள்ள அரிசி குடோன்களில் போலீசார் திடீர் தீவிர அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அரசு குடோன்களில் இருந்தே நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து உணவு பாதுகாப்புதுறை செயலர் ஆனந்த குமார், உணவுதுறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர் குடோன்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து குடிமை பொருள் குற்றபுலனாய்வு கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் சோதனை நடத்த குடிமைபொருள் குற்றபுலானாய்வு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து தூத்துக்குடியில் குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிர மணியன் தலைமையிலான காவலர்கள் தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள ரேஷன் அரிசி வைக்கப்பட்டுள்ள அரசு குடோன் மற்றும் குறுக்குசாலையில் உள்ள கூட்டுறவுதுறை குடோன்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது, போலீசார் ரேசன் அரிசி கையிருப்பு பதிவேடுகள், வினியோக பதிவேடுகள் மற்றும் ரேஷன் பாமாயில் போன்ற பொருட்கள் இருப்பு உள்ளிட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் அரிசி வைக்கப்பட்டுள்ள அரசு குடோன்களையும் போலீசார் ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.