தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னை சுமார் 6200 ஏக்டேர் பரப்பளவில் பல்வேறு நிலைகளில் உள்ளது. ஆங்காங்கே தென்னையில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் காணப்படுகின்றது.
இது குருத்து வண்டு அல்லது கருவண்டு எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வண்டுகள் இளம் கன்றுகள் மற்றும் வளர்ந்த மரத்தில் தாக்குதல் ஏற்படுத்தி பொருளாதார சேதத்தை உண்டாக்கும்.
பொதுவாக எருக்குழிகளில் முட்டையிடும் வண்டுவின் முட்டைகள் வெள்ளை நீள்வட்ட வடிவத்தில் 5 முதல் 15 சென்டிமீட்டர் ஆழத்தில் காணப்படும். முட்டை பருவமானது 8 முதல் 18 நாட்களாகும். ஒரு பெண் வண்டானது 150 முட்டைகள் வரை இடும்.
முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்களானது தடித்து லேசான பழுப்பு நிறத் தலையுடன் மந்தமான வெள்ளை நிறத்தில் எருக்குழிகளில் 5 முதல் 30 செ.மீட்டர் ஆழத்தில் காணப்படும். கூட்டுப்புழுக்கள் எருக்குழிகளில் 30 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் ஆழத்தில் காணப்படும். ஆண் வண்டுகள் தலையில் நீண்ட கொம்புகளுடனும், பெண் வண்டுகள் குட்டையான கொம்புகளுடன் காணப்படும். பொதுவாக இவ்வண்டுகள் 100 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது.
இவ்வண்டுகளின் தாக்குதல் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
வளர்ந்த வண்டுகளானது இளம் தென்னங்கன்றுகளின் குருத்து பகுதியில் துளையிட்டு திசுக்களை உண்பதால் குருத்துக்கள் காய்ந்துவிடும். இளங்குருத்துக்கள் முழுமையாக விரிவடையாமல் திருகிக் கொண்டும் யானையின் தந்தம் போன்றும் காணப்படும். சேதமுற்ற மரத்தின் குருத்துக்கள் முழுமையாக விரிவடையாமலும், எஞ்சிய குருத்துப் பகுதி கத்தரிக்கோலால் வெட்டியது போலவும் தோற்றமளிக்கும்.
வண்டுகளின் தாக்குதலிருந்து காக்க தோப்பினை சுத்தமாக வைப்பதுடன் ஆண்டிற்கு ஒரு முறை மரத்தின் மேல் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். எருக்குழிகள் அமைப்பதை தடுக்க வேண்டும். இளங்கன்றுகளில் சேதத்தை தவிர்க்க 45 நாட்களுக்கு ஒரு முறை 4 கிராம் எடையுள்ள 3 நாப்தலின் உருண்டைகளை உள் மட்டையின் இடுக்குகளில் வைக்கவேண்டும். வளர்ந்த மரத்தின் குருத்து பகுதியிலுள்ள வண்டினை கூர்மையான இரும்பு கம்பியால் வெளியில் எடுத்து அழிக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளர்ந்த மரங்களில் வேப்பம் புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் இரு பங்கு மணல் கலந்து மரத்திற்கு 150 கிராம் வீதம் மட்டை இடுக்குகளில் இடவேண்டும். மழைக்காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறிகளை தோப்பிற்குள் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு 5 லிட்டர் நீரில் கலந்து சிறு மண்பானைகளில் நிரப்பி தோப்பில் ஆங்காங்கே வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
காண்டாமிருக வண்டின் தாக்குதல் தென்னை மரங்களில் தென்பட்டால் மேற்கூறிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தாக்குதலை கட்டுப்படுத்தி விளைச்சல் பாதிப்பின்றி மகசூல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்துள்ளார்.