தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப் படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதியை உடனே நிறைவேற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ., ஆகியோரிடம் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என அவரது வம்சாவழியினர், இந்திய சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில் ஒன்றாக இவை இடம் பெற்றன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோரை, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் "வலசை " கண்ணன் தலைமையில், தமிழகத்தின் தலை நகரான சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப் படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறு தியை உடனே நிறைவேற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பண்பாட்டு கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் :
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று சிறப்பானதொரு ஆட்சியை வழங்கி வரும் திமுக தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசிற்கு எங்களது அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த மே மாதம் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், திமுக சார்பில் வெளியிடப் பட்ட சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 99 வது பக்கம் 455 வது அறிக்கையாக தலைநகர் சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்து தரப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிகுந்த வாக்குறுதியை கொடுக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் மற்றும் இந்திய சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையான,
இந்திய விடுதலையின் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தலைநகர் சென்னையில் முழு திருஉருவச் சிலையை அமைத்து தர வரும் 21.06.2021 அன்று நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டு, வரலாற்று பதிவேடுகளில் திமுக தலைமையிலான அரசின் சாதனை களில் ஒன்றாக இதனையும் இடம் பெறச் செய்ய விரும்புகிறோம். எனவே, இதனை இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் போராட்ட மண்ணான பாஞ்சாலங் குறிச்சி கிராமம் இடம் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தங்களது சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என்றும் எங்களது சார்பாக கோரிக்கையை வைத்து அதனை நிறைவேற்றித் தரும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது, த.வீ.க.பண்பாட்டுக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ராமலிங்கம், மல்லுச்சாமி, புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சிவசுப்பிரமணியன் (எ ) கல்யாணி, சரவணப்பெருமாள், பாலசுப்ரமணியன், வீரபொம்முதுரை, அரசமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.