சாத்தான்குளம் பைனான்சியர் கொலை வழக்கில், புகார் எழுந்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் உள்பட இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு நேற்று காலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீரென வருகை தந்தார். பின்னர் காவல் நிலையத்தில் பைனான்சியர் மார்ட்டின் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிர ண்டு கார்த்திகேயன், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஸ்குமாரிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாத்தன்குளத்தில் பைனான்சியர் மார்ட்டின் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 8பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது குணமானதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கொலைக்கு போலீஸ் துறையை சேர்ந்த சிலர் மீது குற்றச்சாட்டப்பட்டது.
காவல் ஆய்வாளர் மற்றும் 2 உதவி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து எனக்கு கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. இதை தொடர்ந்து காவல் ஆய்வாளர், 2 உதவி காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் திங்கள்கிழமை (இன்று) பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் கூறினார்.