தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சாருஸ்ரீ இன்று ( 19.6.2021 ) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
"தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி கொரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, 2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சி 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
புதிய மாநகராட்சி ஆணையருக்கு மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மகனி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா, உதவி ஆணையர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.