கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறக்கட்டளையிலிருந்து வருவதாகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாடு இலவசமாக தருவதாகவும் கூறி தலா 500 ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் சாயமலை பகுதியைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் பால்துரை (47) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ராமர் காலனியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் செந்தில் பிரபு (37) ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லிச்சேரி கிராமத்திற்கு சென்று, இருவரும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அறக்கட்டளையில் இருப்பதாகவும், அங்குள்ள கோவில் மாடுகளை மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு இலவசமாக கொடுப்பதாக கூறி, அங்குள்ள 15 மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளின் பெயர்களை சேகரித்துக் கொண்டு சென்று விட்டனர்.
பின் நேற்று (17.06.2021) மேற்படி இருவரும், அந்த வில்லிச்சேரி கிராமத்திற்கு சென்று ஏற்கனவே பெயர் சேகரித்தவர்களிடம், உங்களுக்கு கொடுக்கப்படும் மாடுகள் இலவசம் தான் ஆனால் அதற்கு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் ஆகவே எல்லோரும் தலா ரூபாய் 500 கொடுங்கள் என்று கூறி ஏமாற்றி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனே சம்மந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவனு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு பால்துரை மற்றும் செந்தில்பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது குறித்து வில்லிச்சேரி இந்திரா நகரை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்று சிலர் நூதனமான முறையில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இது போன்று யாராவது பணம் கேட்டு வந்தால் காவல்துறையின் அவசர போலீஸ் எண் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் இது போன்று யாராவது மோசடி வேலைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.