• vilasalnews@gmail.com

கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்க... தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளுக்கு  தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கால்நடை காப்பீடு திட்டமானது கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பதினால் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து பாதுகாக்கவும், கால்நடை காப்பீட்டின் நன்மைகளை விளக்கும் பொருட்டும் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

2020-2021ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை குழுமம் திட்டத்தின் கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல் படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1500 கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கால்நடைகளை ஒரு வருடம் அல்லது முன்று வருடங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பசு, ஒரு எருமை, பத்து எண்ணிக்கை கொண்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறி யாடுகள் வைத்து இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஒரு நபர் ஐந்து கால்நடை இனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்து கொள்ளலாம். கறவைப்பசு, எருமை இவ்வினங்கள் 2 1/2 வயது முதல் 8 வயதிற்குள் இருக்க வேண்டும். வெள்ளாடுகள் மற்றும் செம்மறி யாடுகள் 1 முதல் 3 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கால்நடைகளுக்குரிய காப்பீடு பிரிமியத்தில் 50 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்து பயனடையலாம். கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளுக்கு காப்பீடு செய்திட அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் அதன் அடிப்படையில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும். காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளுக்கு காதுவில்லைகள் பொருத்தப்படும்.

காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகள் இறப்பு ஏற்பட்டால் காதுவில்லையும், கால்நடை உதவி மருத்துவரால் நேரில் ஆய்வு செய்து வழங்கப்படும் கால்நடைகளின் இறப்புச் சான்றினையும், காதுவில்லையும் புகைப்படமும் இணைத்து காப்பீடு நிறுவனத்தில் அளித்தால் தங்கள் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்பும் கால்நடை வளர்ப்போர் அருகாமையில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

  • Share on

சசிகலா, தினகரனை அதிமுகவில் அனுமதிக்க மாட்டோம் - தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

இலவச மாடு தருகிறோம்...ஜிஎஸ்டி கட்டணம் மட்டும் தாங்க போதும் - பலே வசூல் வேட்டை ஆசாமிகள் கைது!!

  • Share on