• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியல்!

  • Share on

தூத்துக்குடி அருகே கடற்கரை பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள ராஜ பாளையம் கிராமத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதையில் உப்பளங்கள் உள்ளன இந்த பகுதியில் மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்து சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து மனுவும் கொடுத்து உள்ளனர் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் மீண்டும் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மிக்கேல் தர்ம மணி தலைமையில் உப்பள உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். குப்பை வண்டியில் இருந்து  குப்பைகளை கொட்ட விடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி உப்பள உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கையில் :

இந்தப் பகுதியில் சில சமூக விரோதிகள் மண் எடுத்து பள்ளம் ஆக்கப்பட்ட அவ்விடத்தில் தற்போது மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதன்பின் கொட்டப்பட்ட குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும் போது வரும் புகையானது அடிக்கும் காற்றால்  பல்வேறு திசைகளுக்கும் பறக்கிறது.

இதனால் காற்றில் கலந்த புகை மற்றும் கழிவு தூசிகளானது அருகாமையில் உள்ள உணவு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் உப்பு தயாரிப்பு பகுதிகளில் சென்று அங்குள்ள உப்புக்கள் மீது படிகிறது. அத்தகைய உப்பை உண்ணும் போது ஏதேனும் வியாதிகள் கூட வர வாய்ப்புள்ளது.

மேலும் இந்த மாசு புகையால் அருகாமையில் உள்ள கடற்கரை தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே இவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படாமலும், அதற்குத் தீ வைக்காமலும் இருக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

  • Share on

புகழேந்தி விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை - கடம்பூர் ராஜூ பேட்டி

தட்டப்பாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

  • Share on