முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி டிரைவர் கொலையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் கீழபுத்தநேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலை மகன் மாரியப்பன் (50). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு கீழபுத்தநேரியை சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன் (54) என்பவரது சகோதரரான ஐக்கோர்ட் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார்.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று (15.06.2021) மாரியப்பன் தனது இருசக்கர வாகனத்தில் வசவப்பபுரம் செந்நெல்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மூக்கையா (எ) சண்முகநாதன் (54) மற்றும் அவரது மகன் முருகபெருமாள் மற்றும் அவரது உறவினர்களான ஐக்கோர்ட் மாரியப்பன் மகன்கள் பாலமுருகன், பாரத், சுடலை மகன் பாலசுப்பிரமணியன், ஆறுமுகநயினார் மகன்கள் மகேந்திரன், மனோ, பாலமுருகன் மகன் மாரிசெல்வன், வீரமணி மகன் பாலமுருகன், ஆறுமுக நயினார் மகன் பண்டாரம் ஆகியோர் சேர்ந்து மாரியப்பனை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், ராஜாராபர்ட் உட்பட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டதில் கீழபுத்தநேரியைச் சேர்ந்த பண்டாரம் மகன் மூக்கையா (எ) சண்முகநாதன் (54) மற்றும் அவரது மகன் முருகப்பெருமாள் (24) ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.