தூத்துக்குடியில் மீன் பிடி தடை காலம் முடிந்து முதல் நாளாக 102 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மகிழ்ச்சியோடு கரை திரும்பினர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் பட்டு வருகிறது.
இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 420 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள சிறு, சிறு பழுதுகளை சரிசெய்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த தடைக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் கடலுக்கு சென்றனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுழற்சி முறையில் 120 படகுகள் கடலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிரப்பப்பட்டன. நேற்று அதிகாலையில் விசைப்படகுகளில் மின்விளக்குகளை எரியவிட்டபடி மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 102 படகுகள் கடலுக்கு சென்றன.
அதனைத் தொடர்ந்து, தடை காலம் முடிந்து முதல் நாள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடல் சென்று அதிக அளவில் மீன்பிடித்து மகிழ்ச்சியோடு கரை திரும்பினர். மேலும் பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கப்பெற்று அவை அதிக அளவில் ஏலத்தில் விற்பனையாகி இருப்ப தாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
61 நாட்கள் தடை காலம் முடிந்து ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கப்பட்டு மீனவர்கள் கரை திரும்பியதை அடுத்து, தூத்துக்குடி துறைமுக மீன் விற்பனை ஏலக்கூடத்தில் வியாபாரிகளும், பொதுமக்கள் மீன்களை வாங்க குவித்தனர். இதனால் அங்கு பாதுகாப்பிற்கு போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இரண்டு மாத காலத்திற்கு பின்பு விசைபடகு மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்த முதல் நாள் என்பதால் ஒவ்வொரு மீன்களின் விலையும் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டதாக மீன்வியாபாரிகள் தெரிவித்தனர்.