• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பெய்யும் மழை நீர் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக ரூ.950 கோடியில் சிறப்பு திட்டம்... விரைவில் முடியும் - கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் பேட்டி!

  • Share on

மழைப் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் ஊருக்குள் புகாமல் தடுப்பதற்காக ரூ.950 கோடியில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. அவை விரைவில் முழுமையாக முடியும் என கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலரும், தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பக்கிள் ஓடை, ஜெயராஜ் ரோடு, சிவந்தாகுளம், திருச்செந்தூர் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறுகையில் : 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொருத்தவரையில் மாவட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு செய்வதற்கு தமிழக அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, மருத்துவ துறையின் மூலம் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு 6 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை வரலாம் என்ற கருத்து பரவலாக நிலவுவதால் அது மாதிரியான சூழலை எதிர்கொள்ள தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சை வசதிக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 900 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகளுடன் அமைக்கப் பட்டு வருகிறது. இந்த விரிவாக்கமானது தற்பொழுது 550 படுக்கைகளுக்கு நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து முழு இலக்கையும் எட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொள்ளளவு உள்ள கொள்கலனும்  நிறுவப்பட்டுள்ளது. 16 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு நெடுநாட்களுக்கு 1500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதை போல கோவில்பட்டி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் கொள்கலன் நிறுவி நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகளை மேம்படுத்து வதற்கு ஆய்வுகள் செய்யப்பட உள்ளது. 

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தாலுகா மருத்துவ மனைகள், திருச்செந்தூர், விளாத்தி குளம், மருத்துவ மனைகளிலும் இதுபோன்ற படுக்கை விரிவாக்க வசதிகள் எடுக்கப்பட்டுள் ளன. அடுத்த கொரோனா அலை வருவதற்கு முன்னதாக தமிழகத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதற்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவுபெறும். தூத்துக்குடி மாநகராட்சி சமதள நிலப்பரப்பினை உடைய பகுதி அல்ல கடல் மட்டத்திற்கு கீழான பகுதிகள் நிறைய உள்ளன. எனவே மழைக்காலங் களில் மாநகராட்சி பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதை தடுப்பதற்காக புதிய திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் மழைப் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் ஊருக்குள் புகாமல் தடுப்பதற்காக ரூ.950 கோடியில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. இன்னும் 800 மீட்டர் தொலைவுக்குள்ளாக மட்டும் பணிகள் முடிவடைய வேண்டி உள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமாக உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதனால் நிர்வாக ரீதியாக அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருப்பதால் பணிகள் தாமதப் படுகின்றன. 


இந்த திட்டத்தின்படி பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரானது ஊருக்குள் புகுந்து விடாமல் வெளியி லேயே தடுக்கப்பட்டு கால்வாய் மூலமாக புதூர் பாண்டியபுரம் வழியாக நேரடியாக கடலில் கலக்கும் படி ஒரு முகத்து வாரமும், மற்றொரு திசையில் உப்பாற்று ஓடையில் மழைநீர் கலந்து கடலுக்கு செல்லும் வகையிலும் திட்ட பணிகள் வகுக்கப்பட்டுள்ளன. 

மேலும் குடிநீர் வழங்கலில் 248 கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமும், 93 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் வழங்கும் மற்றொரு  திட்டமும் முடிவடைந்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை முடிக்கப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் திட்டப் பணிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோல திருச்செந்தூர் சாத்தான்குளம் பகுதியில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்க அடுத்த வரும் பருவமழை காலங்களில் இது நல்ல பலனை விவசாயிகளுக்கு கொடுக்கும். மேலும் திருச்செந்தூர் நகரத்தின் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஊருக்கு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து மற்ற பிற பகுதிகளுக்கு போக்குவரத்து நடைபெறும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற பல சீர்திருத்த நடவடிக்கைகள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.


  • Share on

கடம்பூர் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

மீன் பிடி தடை காலம் முடிந்தது : மகிழ்ச்சியோடு முதல் நாள் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்கள்!!

  • Share on