நெல் பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் கூறியதாவது :
நடப்பாண்டில் கார் பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பயிர் சுமார் 1800 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தப் பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட்ட உடனே கண்காணித்து உடனடியாக பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
மாவட்டத்தின் சில பகுதிகளில் நெல் பயிரில் தண்டு துளைப்பான் தாக்குதல் காணப்படுகிறது. தண்டு துளைப்பான் தாக்குதல் தங்கள் வயல்களில் உள்ளதா என்பதை விவசாயிகள் கண்டறிந்து ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மேற்கொள்ளுதல் வேண்டும்.
தண்டுத் துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள் :
பாதிக்கப்பட்ட பயிர்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டை கூட்டம் காணப்படும். தழைப் பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்து விடுகிறது. இதுவே குருத்து காய்தல் எனப்படுகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானிய கதிர்களும் காய்ந்துவிடும் மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களை வெண்கதிர் எனப்படுகிறது. குருத்தை பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்து விடும். பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
முட்டை ஒட்டுண்ணிகள் ஆக டிரைக்கோடெர்மா ஜப்பாணிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும். நாற்று நடும் போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதால் தண்டுதுளைப்பானின் முட்டை குவியல் அளிக்கப்படுகிறது. வேப்பக் கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலமும் தண்டுதுளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
அசார்டியாக்டின் 0.03% 1000மி.லி /எக்டர் அல்லது குளோரோடேரேனிலிபுருள் 18.5 SC/50 மி.லி/எக்டர் அல்லது புளுபென்டிமைட் 20% WG 125 கிராம்/எக்டர்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகள் தண்டுதுளைப்பானில் இருந்து நெல் பயிரை காத்திட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.