தூத்துக்குடி கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரம் பாதுகாப்பு காரணங்களுக்காக தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு படகில் விரலிமஞ்சள், பீடி இலை, வெங்காய விதை, கடல் அட்டை உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோன்று இலங்கையில் இருந்து கனடா செல்வதற்காக வந்து மதுரையில் சிக்கிய இலங்கையைச் சேர்ந்த 27 பேரும் மங்களூரில் சிக்கிய 40 பேரும் தூத்துக்குடி கடற்கரை வழியாக ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்தை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு தூத்துக்குடியை தேர்வு செய்து சிக்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் கடலோர பாதுகாப்பு காவலர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓர் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளிநாட்டவர் அல்லது பயங்கரவாதிகள் கடற்கரை வழியாக ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு காவலர்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தீவு பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடற்கரையோர மீனவ கிராமங்களிலும் சந்தேகப்படும்படியாக யாரேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது