கொரோனா தொற்று பாதித்த பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்று அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரையும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு கூறுகையில் :
தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த வித்யா ( வயது 25) கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பிரச்சனை காரணமாகவும் குழந்தை பேறுக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28 ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த 30 ம் தேதி வித்தியாவிற்கு சிறுநீரக பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மேலும் பேறுகால சிகிச்சையில் அவருக்கு முதல் பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. அப்பொழுது தாய் வித்யா கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியால் பாதிக்கப் பட்டிருந்தார். மேலும் பிறந்த மூன்று குழந்தைகளும் எடை மிகவும் குறைவாக இருந்தது. குறை மாத குழந்தைகளாகவும் பிறந்தன. ஆனால், குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை.
அதனைத்தொடர்ந்து மூன்று குழந்தைகளுக்கு சிசு தீவிர கவனிப்பு பிரிவில் வைத்து குழந்தை நல மருத்துவர்கள் மூலம் மூச்சுத்திணறல் மற்றும் குறைமாத தன்மை காண சிகிச்சை வழங்கப்பட்டது. ஏழு நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த குழந்தைகள் நலம் பெற்று பின்னர் தாயிடம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. தற்போது 15 நாட்களுக்குப் பின்னர் இன்று (15.6.2021 ) மூன்று குழந்தைகளும் சரியான எடை மற்றும் சத்து மருந்துகளுடன் தாய் மற்றும் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவித்தார்.