• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் குரூஸ் பர்ணாந்தீஸ் 151 வது பிறந்த நாள் விழா : சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

  • Share on

தூத்துக்குடி நகரின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் 151 வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வெஸ்ட் காட்டன் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி மக்களால் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் 151 வது பிறந்த நாள் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழக அரசின் சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (15.11.2020) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்) போ.சின்னப்பன் (விளாத்திகுளம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தூத்துக்குடி நகர மக்களால் இன்றளவும் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களுடைய நினைவுகள் மக்களின் மனதில் காலத்தால் அழியாத ஒன்றாகும். அவர் ஆற்றிய தொண்டு என்றைக்கும் மக்களின் மனதில் அழியாத நினைவு சுவடுகளாக நிலைத்து நிற்கும். அந்த வகையில் பெருமைப் படுத்த வேண்டுமென்று தொடர்ந்து பல காலமாக வைக்கப்பட்ட கோரிக்கை மாண்புகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசால் நிறைவேற்றப்பட்டு அவர்களுடைய பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடிட 24.03.2020 அன்று முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று தமிழக அரசின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விடுதலை போராட்ட வீரர்கள் தியாக செம்மல்கள் நிறைந்த மண் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். தூத்துக்குடி நகர மக்களின் பெரும் மதிப்பை பெற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களின் சிலை நிறுவப்பட்டதற்கு பிறகு இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர்கள் இருந்தும் கூட  எந்தவீதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். 

எங்களது செய்தி மக்கள் தொடர்புத்துறை மானிய கோரிக்கையின் போது 24.03.2020 அன்று தூத்துக்குடி நகர மக்கள் மட்டுமின்றி மீனவர் சமுதாயத்தை சேர்ந்த தமிழகத்தில் வாழும் அனைவரின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபளிக்கும் வகையில் 110 விதியின் கீழ் பிறந்தநாளை அரசு விழாவாக நடத்திட அறிவிப்பு செய்து பெறுமை சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

குரூஸ்பர்ணாந்தீஸ் தூத்துக்குடியில் 15.11.1869 ஆம் ஆண்டு பிறந்தார். தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12.1909 முதல் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் ஆவார். தூத்துக்குடி நகர மக்களுக்கு குடிநீர் பஞ்சம் பெரும் பிரச்சனையாக இருந்தது. தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் இலங்கையில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தார். ஆனாலும் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பின்னர் கடம்பூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை. கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆயினும் இதுவும் பொது மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை.

கடற்கரை நகரமான தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண 24 மைல் தூரமுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திக்கரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக செயல் படுத்தினார். இதன் காரணமாக இன்றளவும் தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டதற்கு குரூஸ் பர்ணாந்தீஸ் எடுத்த சீறிய முயற்சிதான் காரணமாகும். இவரது பிறந்த நாளினை எங்களது செய்தி மற்றும் விளம்பரத் துறையின் சார்பில் அரசு விழவாக அறிவிக்கும் அரசாணை வெளியிட்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன். ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் அவர்களுக்கு தூத்துக்குடி மக்கள் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதுவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு நகர வங்கி தலைவர் மா.சுதாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், வட்டாட்சியர் ஜஸ்டிக், சிலை பராமரிப்பாளர் ஜெனோ ரவேல், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுக நயினார் திருப்பாற்கடல், ஆர்.மனோஜ்குமார், செரினா பாக்கியராஜ், புல்டன் ஜெசீன், ஏசாதுரை, ஜெ.தனராஜ், ஜவகர், மணப்பாடு கயேஷ். பரதர் நல சங்க தலைவர் பீட்டர் பெர்ணான்டோ, ராவ்பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸ் நற்பணி மன்ற தலைவர் ஜெர்மன் கில்டு , செயலாளர் சசிகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு : தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளர்கள்

  • Share on