ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கதுரை, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் இன்று மதுரை மாநகர் காவல்துறை துணை சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஈரோட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற் றிய போது போலீஸ் -பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் கிராம கண்காணிப்பு அலுவலர்கள் செயல்பட்டார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பற்றிய பெயர், செல்போன் எண்கள் போன்ற விவரம் அந்தந்த பகுதியில் உள்ள பலகையில் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் அந்த பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலைய செல்போன் எண்கள், உயர் அதிகாரிகள் எண்களும் அதில் இடம் பெற்றி ருக்கும். இவ்வாறு ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுடைய முக்கிய பணி பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத்தடுப்பு தகவல்களை சேகரிக்கும் பணி ஆகும். இந்த சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்கள்.
குடும்ப பிரச்சினை, நிலத்தகராறு, பாலியல் தொந்தரவு உள்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
இத்தகைய சிறப்புமிகு ஈரோடு திட்ட பார்முலாவை மதுரை மாநகரில் புதிய காவல்துறை துணை சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் தங்கதுரை மதுரையிலும் செயல்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு மதுரை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.