ஊரடங்கின் காரனமாக மூன்று வாரங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் வரும் திங்கட்கிழமை( 14.6.2021) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்நிலையில், மூடப்பட்ட கடைகளை திறந்தால் கடையில் மூடும்போது இருந்த சரக்குகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்திருக்கிறது தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்திற்கு. இதனால் இதை தணிக்கை செய்து தெளிவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி இருக்கின்றனர் தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர்.
தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் :
‘’கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மே10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கால கட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள், சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்பட்டதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த குற்றங்களை எல்லாம் டாஸ்மாக் பணியாளர்கள் மீது சுமத்தி விட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அதனால் மதுக்கடைகளை திறப்பதற்கு முன்பாக, மதுக்கடிகளை முடிய நாளில் தணிக்கை செய்துள்ளபடி மதுபான வகைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரி பார்த்த பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதனால் திட்டமிட்டபடி டாஸ்மாக் திறக்கப்படுவதில் ஏதும் சிக்கல் இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தாலும், திட்டமிட்டபடி டாஸ்மாக் கடைகள் நிச்சயம் திறக்கப்படும். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. சங்கத்தின் சந்தேகத்திற்கு அதிகாரிகளால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு விடும் என சொல்லப்படுகிறது டாஸ்மாக் வட்டாரம்.