கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கிய சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியிலேயே விவசாய கடன் தள்ளுபடி , 6 சவரன் நகைகளுக்கான கடன் தள்ளுபடி ஆகியவை ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து 5 சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் அல்லா தோருக்கும் கடன் தள்ளுபடி அளிக்கப் பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. விசாரணையில் உண்மை தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். கூட்டுறவு வங்கிகளில் வைக்கப் பட்டுள்ள 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்றார்.