மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியது!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுக தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ”திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவம்பர் 23 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அதில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட 27 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணி குறித்தும், தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம் மற்றும் தேர்தல் அறிக்கை பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் குழுவாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க செயற்குழு, பொதுக்குழு, நிர்வாக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரால் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு 20 பேர் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் குழுவில் 30 பேர் இடம் பெற்றனர்.
இருப்பினும், இந்த செயல் திட்ட குழுவின் உறுப்பினர் கட்சி மாறிய காரணத்தினாலும், உறுப்பினர் மறைவு காரணமாகவும் குழுவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.