நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றது. அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். முதலமைச்சரான முதல் நாளிலேயே முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு பேருந்து கட்டணம் இலவசம், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட ஐந்து உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இதில் கொரோனா சிகிச்சை கட்டணம், மகளிருக்கான பேருந்து கட்டணம் இலவசம் என இரண்டுமே விருப்பு வெறுப்பின்றி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. வெறும் அறிவிப்போடு மட்டும் நில்லாமல் அதனை அடுத்த நாளே நடைமுறைக்குக் கொண்டுவந்ததன் மூலம் பாராட்டைப் பெற்றார். தற்போது அமெரிக்க வாழ் தமிழ் பெண் செலின் கவுண்டர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “இந்த கொரோனா காலத்தில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு இந்த மூன்று அறிவிப்புகளும் கொரோனா காலத்தில் அல்லல்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலமைச்சரான உடனே இந்த நடவடிக்கைகளை எடுத்த ஸ்டாலின் பாராட்டுக்குரியவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருந்தார். 43 வயதாகும் செலின் கவுண்டர் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார்.
அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குநராகவும் இருக்கிறார். செலின் இக்குழுவில் இடம்பெற்றிருந்தபோதே ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.