பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியலில் அவர் கடந்து வந்த பாதை குறித்து ஒரு பார்வை...
சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. கிட்டத்தட்ட 33 துறைகளில் 10-க்கும் மேற்பட்டோருக்குப் புதிதாக அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். எந்த ஒரு செயலுக்கும் அதற்கான விமர்சனங்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அப்படிப் புதிதாக அமைந்த அமைச்சரவையில் டெல்டா மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அமைச்சரவை தரப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு ``காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் திருவாரூரைச் சேர்ந்த எனக்குத் தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” என ட்விட்டர் மூலம் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் ராதபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்பாவு-வை சபாநாயகராக நியமித்தும் விடையளித்துள்ளார்.
2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி முடிவுகளும் அது தொடர்பான சர்ச்சைகளும் இன்னும் தீராத நிலையில் தற்போது நான்காவது முறையாக அந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார் அப்பாவு. தி.மு.க அமைத்துள்ள 16-வது தமிழக அரசின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த அப்பாவு யார்?
69 வயதான அப்பாவு தன்னுடைய தொடக்க கால அரசியலைக் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது, அதில் தன்னை இணைத்துக்கொண்டு 1996-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர் தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து பிரிந்து 2001-ல் நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு தன் நடவடிக்கையால் அந்தப் பகுதி மக்களிடம் நல்ல மதிப்பை வளர்த்தெடுத்திருந்தார்.
தி.மு.க மீது ஈர்ப்பு ஏற்பட்டு 2006-ல் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். அதன்பின் 2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களம் இறங்கி வெற்றி பெற்றார். 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதி தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டது. கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேல்துரைக்காக தேர்தல் வேலைகளைப் பார்த்தார்.
சுயேச்சையாக ஒருமுறை உட்பட மூன்று முறை தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதி என்றபோதும் கட்சி அந்தத் தொகுதியைக் கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவுசெய்ததும் அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அதை ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிகளைச் செய்தவர் அப்பாவு. அந்த அளவுக்கு கட்சியில் சேர்ந்த குறிப்பிட்ட சில நாட்களிலேயே கட்சி மீதும், கருணாநிதி மீதும் அதீத பற்று கொண்டவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். ஆனால், 2011 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட தே.மு.தி.க வேட்பாளர் மைக்கேல்ராயப்பன் வெற்றிபெற்றார்.
2016-ஆம் ஆண்டு அப்பாவுக்கு மீண்டும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் நடந்ததேர்தலும் அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளும் அப்பாவு வாழ்க்கையில் மிக முக்கியமாவை.
2016 சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் அப்பாவு, அ.தி.மு.க சார்பில் இன்பதுரையும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 69,541 வாக்குகள் பெற்ற அப்பாவு அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாக அறிவிக்கப்பட்டது.
அப்போது, ``தபால் வாக்குகள் எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளது. இன்பதுரையைவிடக் கிட்டத்தட்ட 150 வாக்குகள் அதிகம் பெற்று நான்தான் தேர்தலில் வெற்றி பெற்றேன்” என அப்பாவுவும் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தேர்தல் அலுவலர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகவே அப்பாவு, அவரது தேர்தல் முகவர் உட்பட தி.மு.க-வினர் அனைவரையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். உண்மையில் 2016 தேர்தலின்போது நடந்தது என்ன?
2016 ராதாபுரம் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 1508 தபால் வாக்குகள் பதிவாகின. அதில், அப்பாவு 863 வாக்குகளும், இன்பதுரை 200 வாக்குகளும் நோட்டா உட்படப் பிறர் 445 வாக்குகளையும் பெற்றனர். இதில் ``அப்பாவு பெற்ற தபால் வாக்குகளில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கியிருந்ததால் 203 தபால் வாக்குகள் செல்லாது. அதுவும் ஒரே பள்ளியின் தலைமை ஆசிரியரே கையெழுத்திட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமல்ல நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளிக்கும் தகுதி உடையவர் அல்ல” எனப் பல காரணங்களை கூறி அவற்றைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை கோரிக்கை வைத்ததை ஏற்றுத் தேர்தல் அலுவலரும் அப்பாவு பெற்ற 203 வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 300 வாக்குகளைச் செல்லாது என அறிவித்தார்.
இதையடுத்து, ``நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் முதுநிலை ஆசிரியர் தகுதி உடையவர்கள் தான். அவர்கள் சான்றொப்பம் அளிக்கலாம் என தமிழக அரசு அரசாணையே வெளியிட்டுள்ளது. தன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு 300 தபால் வாக்குகளைச் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் இன்பதுரை பெற்ற வாக்குகள் 8,710. ஆனால் 9,058 வாக்குகள் வாங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல வேட்பாளரும், அவரது முகவரும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடத்துவதும் சட்டவிரோதமானது. எனவே நாங்கள் இன்றி நடந்த 19,20,21 ஆகிய சுற்றுகளின் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும்” எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அக்டோபர் 2019-ல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், `தபால் வாக்குகளுக்குச் சான்றொப்பம் வழங்கும் அதிகாரம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் இல்லை' என்ற இன்பதுரையின் வாதத்தை மறுத்ததோடு, ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, மறு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அ.தி.மு.க எம்.எல்.ஏ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் முடிவுகள் தற்போது வரை வெளியிடப்படாமலேயே இருக்கின்றன. ஆனால், அதற்குள் அடுத்த தேர்தலே வந்து அந்தத் தேர்தலில் இவ்விருவரும் போட்டியிட்டனர். இந்த முறை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இன்பதுரையை விட 4,492 வாக்குகள் அதிகம் பெற்று அப்பாவு தேர்தலில் வெற்றியடைந் திருக்கிறார்.
விவசாயிகள் பிரச்னை, தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தது என பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் அப்பாவு. சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிக அனுபவம் உள்ளவர் என்ற அடிப்படையில் அப்பாவுக்கு தி.மு.க தலைமை சபாநாயகர் பதவி அளித்திருக்கிறது. அப்பாவுவின் தொடர் போராட்ட குணத்திற்குக் கிடைத்த மரியாதை என அரசியல் விமர்சகர்களும், வழக்குக்காக ஓடித்தேய்ந்த அவரது கால்கள் இனி சபாநாயகராக அமர்ந்து அவை நடவடிக்கைகளுக்குத் தீர்ப்பு எழுதட்டும் என்று தி.மு.க-வினரும் அப்பாவுவை பாராட்டி வருகின்றனர்.
தொடர் போராட்டத்திற்கு உதாரணமாக இருக்கும் அப்பாவு சபாநாயகராக எப்படிச் செயல்படப் போகிறார் என்பது நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.