• vilasalnews@gmail.com

சித்திரை விஷூ பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு - தினசரி 10ஆயிரம் பேருக்கு அனுமதி

  • Share on

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ள நிலையில் தினசரியும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

சித்திரை விஷூ பண்டிகை கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். நடை திறக்கும் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை.

ஏப்ரல் 18ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். 11ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகர விளக்கு பூஜை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பங்குனி மாத பூஜை, ஆராட்டு திருவிழாவில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை கட்டாயம் ஆகும். ஆன்-லைனில் முன்பதிவு செய்த கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - யாருக்கு எல்லாம் இ-பாஸ் தேவை? எதற்கெல்லாம் தடை?

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

  • Share on