கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாதது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக அரசு பல புதிய கொரோனா கட்டுப்பாடுகளை பிறப்பித்திருந்தது. தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் இன்று நடைமுறைக்கு வருகிறது.
மத விழாக்களுக்கு அனுமதி இல்லை
தமிழக அரசு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் இரவு 8 மணி வரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நடத்த அனுமதி இல்லை.
பொது போக்குவரத்து கட்டுப்பாடுகள்
மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் மாநகரப் பேருந்துகளின் சேவை தொடரும். இருப்பினும், பேருந்தின் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. இந்த விதி புதுவை, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளிலுக்கும் பொருந்தும். வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இபாஸ் கட்டாயம்
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் கட்டாயம் இபாஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டிற்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல இபாஸ் தேவையில்லை.
சினிமா தியேட்டர்கள்
மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறலாம். அதேநேரம் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் கலைஞர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் 45 வயதை கடந்திருந்தால் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.