தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக – அதிமுக கட்சிகள் வழக்கம் போல நேருக்கு நேர் மோதுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக,மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுகவில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சி சார்பாக போட்டியிட 8 ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் ஒரே நாளில் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
திமுகவைப் பொறுத்தவரையில் திமுகவில் விருப்பமனு அளித்தவர்களில் 7ஆயிரம் பேருக்கு கடந்த 5 நாட்களாக நேர்காணல் நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு துரைமுருகன், ஐ.பெரியசாமி போன்றோர் நேர்காணல் நடத்தியுள்ளனர்.
அதேபோல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக சார்பில் நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், திமுக நேர்காணலில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளதாம். அதாவது மதுரை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சையதுஜி நேர்காணலுக்காக நேற்று அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். அப்போது அவர் நேர்காணல் நடத்திய ஸ்டாலினிடம் பேனா ஒன்றை அளித்துள்ளார்.
அதைப் பார்த்த ஸ்டாலின் இது எதற்காக என்று கேள்வி எழுப்ப ? இது தங்க பேனா. நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்றதும், இதில் தான் முதல் கையெழுத்து போட வேண்டும் கூறியுள்ளார். ஸ்டாலினும் அந்த பேனாவை அன்போடு வாங்கி கொண்டாராம்.