
பெண்களின் பிரச்சனைகளை அகற்றுவதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மத போதகர், அவரது கார் டிரைவர் என இரண்டு பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த டேவிட் மகன் ஜோஷ்வா இமானுவேல் ராஜ் ( 47 ). இவர் 2016ல் திருநெல்வேலியில் ஒரு கிறிஸ்தவ அமைப்பை நிறுவி மதபோதகராக செயல்பட்டார். இவருடன், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வினோத்குமார் ( 41 ) உதவியாளராக இருந்தார்.
இளம் பெண்களை மதபோதனைகளுக்கு அழைத்து சென்று தனிமையில் வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார் எழுந்தது. மேலும், பெண்களிடம் நகைகளை பறித்து மோசடி செய்ததாகவும் புகார் கூறினர்.
2016ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அன்று, திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று பெண்கள் இவர்களுக்கு எதிராக அப்போதைய மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். இதில், மனமுடைந்த 22 வயது இளம் பெண் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்று தாழையூத்து அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்
இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம்சாட்டப்பட்ட ஜோஸ்வா இமானுவேல், அவருக்கு உடந்தையாக இருந்த வினோத்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜோஸ்வா இமானுவேலுக்கு ரூ.54 ஆயிரம் அபராதமும், வினோத்குமாருக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜெயபிரபா ஆஜரானார்.