
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் செய்தித்துறை அமைச்சரும், கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசும்போது, பாடல் ஒன்றை பாடினார்.
இதைத்தொடர்ந்து பேசிய திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) "உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவருக்கு ஒரு பாடலைச் சொல்ல விரும்புகிறேன்".
நெருக்கடிகள் சூழ்ந்த போதும், கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் என்பார் எங்களுடைய தலைவர் திருமாவளவன். இன்றைக்கு எத்தனையோ நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்தாலும் கூட அவற்றை எல்லாம் தகர்த்து, இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய நிலையில் நம்முடைய மகத்தான முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்றார்.
அப்போது ஒரு பாடலை பாடிக் காட்டிய அவர், "சொல்லாட்சி நடக்குதப்பா நீ வகுத்த ஏட்டினிலே, நல்லாட்சி நடக்குதப்பா நீ இருக்கும் நாட்டினிலே, பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை, நல்லோர்கள் எந்நாளும் அவர் பேச்சைக் கேட்பதில்லை. மீண்டும் திமுக அரசு அமையும். இந்த அரசு அமைவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும், அனைத்துப் பணிகளையும் முன்னெடுப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தலைமையில் முன்வரிசையில் இருப்போம்" என்றார். பாடலுக்கு பாடல் பதிலாக அமைந்ததால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.