• vilasalnews@gmail.com

பத்திரப்பதிவில் மாற்றம்... முத்திரை தாள்களுக்கு பதிலாக இ - ஸ்டாம்ப் வசதி!

  • Share on

பத்திரப்பதிவில் முத்திரை தாள்களுக்கு பதிலாக, இ - ஸ்டாம்ப் வசதியை, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சொத்து விற்பனை பத்திரத்தில் குறிப்பிடும் மதிப்புக்கு ஏற்ப, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். அதன் மதிப்புக்கு முத்திரை தாள் வாங்கி, அதில் பத்திரங்கள் எழுதப்படும் நடைமுறை பயன்பாட்டில் இருக்கிறது. அதற்காக, முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு, பதிவுத்துறை உரிமம் வழங்கி உள்ளது. இதற்கு மாற்று வழியாக, டிஜிட்டல் முறையில், இ - ஸ்டாம்பிங் சேவை துவக்கப்பட்டது.


அதன்படி, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றுக்கான தொகைக்கு முத்திரை தாள் வாங்காமல், அதை குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி, இ - ஸ்டாம்பிங் சான்றிதழை பெறலாம். அதனை பத்திரத்துடன் இணைத்து, பதிவுக்கு தாக்கல் செய்தால் போதும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில், இ - ஸ்டாம்பிங் முறையை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது.


துவக்கத்தில் ஒருசில சார் பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான வசதியும், தனி பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இதற்கான தனி பிரிவுகள் செயல்படுவதில்லை.


இதுகுறித்து பதிவுத்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது :


தமிழகத்தில் சொத்து மதிப்புகள் வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்றால் போல் முத்திரை தீர்வை, பதிவு கட்டணமாக செலுத்தும் தொகையின் மதிப்பும் அதிகரித்து உள்ளது. எனவே, அதிக தொகைக்கு முத்திரை தாள் வாங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.


அதனால், முத்திரை தீர்வை, பதிவு கட்டண தொகையில் ஒரு பகுதிக்கு மட்டும், முத்திரை தாள் வாங்கலாம். பெரும் பகுதி தொகையை இ - ஸ்டாம்பிங் முறையில் செலுத்த மக்கள் விரும்புகின்றனர். இதற்கான தொகையை மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் வழியில், இ - ஸ்டாம்ப் வழங்கும் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். தற்பொழுது, ஆவண எழுத்தர் அலுவலகங்களில் இருப்பவர்கள், இதனை கமிஷன் அடிப்படையில் செய்து கொடுக்கின்றனர்.


புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் பதிவு அலுவலகத்திலேயே, இ - ஸ்டாம்ப் வழங்கும் சேவை செயல்பாட்டில் உள்ளது. இதற்காக தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 5 ரூபாய் முதல் பல்வேறு தொகைக்கு இ - ஸ்டாம்ப் வாங்க முடிகிறது. 


ஆகவே, தமிழகத்திலும் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இ - ஸ்டாம்ப் வழங்க, தனி பிரிவுகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்படுகிறது.


நாட்டில் தற்போதைய நிலவரப்படி, ஸ்டாக் ஹோல்டிங் என்ற நிறுவனம் வாயிலாக, இ - ஸ்டாம்ப் வழங்கப்படுகிறது. இதன் இணையதளத்தில், பதிவு பெற்ற முகவர்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி, தேவையான மதிப்புக்கு இ - ஸ்டாம்ப் பெறலாம்.


சார் பதிவாளர் அலுவலகத்தில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டால், பொது மக்கள் வெளியாட்களிடம் கூடுதல் செலவு செய்வது தடுக்கப்படும்.

  • Share on

எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரையிலான பயணம்... அதிமுகவின் முக்கிய தலைவர் மறைந்தார்!

அதிமுக கடம்பூர் ராஜூ எம்எல்ஏவிற்கு எதிர் பாட்டு பாடிய விசிக எம்எல்ஏ : சட்டப்பேரவையில் சிரிப்பலை!

  • Share on