
எம்ஜிஆர் காலத்திலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக பிரமுகராக கோலோச்சியவர் கருப்பசாமி பாண்டியன். திருநெல்வேலி மாவட்டத்தின் அதிமுக முகமாக இருந்தவர். எம்ஜிஆர் காலத்தில் 1977 மற்றும் 1980 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். கருப்பு நிறமாக இருந்தாலும் உள்ளத்தில் வெள்ளை மனம் கொண்டவர் என எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவர் கருப்பசாமி பாண்டியன். அரசியல் வட்டாரத்தில் கானா என்று அழைக்கப்பட்டார்.
பின்னர், ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவில் கருப்பசாமி பாண்டியன் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததாக, துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார் கருப்பசாமி பாண்டியன்.
ஒரு கட்டத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் 2006 ஆம் ஆண்டு திமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.
ஆனால் கருப்பசாமி பாண்டியனால் திமுகவில் நீடிக்க முடியவில்லை. இதனால் 2015 ல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருப்பசாமி பாண்டியன், மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அமைப்பு செயலாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.
அண்மை காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய கருப்பசாமி பாண்டியனுக்கு உடல்நலக் குறைவு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தூக்கத்திலேயே கருப்பசாமி பாண்டியன் உயிர் பிரிந்தது. இதனையடுத்து, கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.