
கோவை அருகே கருமத்தம்பட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியரை, இரும்பு ராடால் அடித்து கொலை செய்த இரு டிரைவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி - அன்னூர் ரோட்டில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த காளிமுத்து ( 46 ). பம்ப் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இந்த நிவையில், மார்ச் 23 அன்று வழக்கம்போல பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியில் இருந்த போது,
இரவு சுமார் 9:30 மணி அளவில், டிரெய்லர் லாரி ஒன்று பெட்ரோல் பங்கிற்குள் வந்து திருப்ப முயன்றதாகவும், அதைக்கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காளிமுத்துவும், ராமமூர்த்தியும் லாரி டிரைவரை கண்டித்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கோபத்தோடு அங்கிருந்து சென்ற டிரைவர், லாரியை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, மது அருந்தி உள்ளார்.பின்னர் நள்ளிரவு சுமார் 12:30 மணி அளவில், இரும்பு ராடுகளுடன், டிரைவரும் மற்றொரு நபரும் பெட்ரோல் பங்குக்கு வந்துள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த காளிமுத்துவை சரமாரியாக இரும்பு ராடால் அடித்து கொலை செய்தனர். தொடர்ந்து, அலுவலக கண்ணாடிகளை நொறுக்கினர்.
சத்தம் கேட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வருவதை கண்ட இருவரும் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடினர். தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
குற்றவாளிகளின் செல்போன் சிக்னலை கொண்டு தேடினர். அதில், ராயர்பாளையம் பகுதியில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, கீழே விழுந்ததில் இருவரின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர்களான சாத்தூரை சேர்ந்த சரவணக்குமார் ( 28 ) கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து ( 33 ) என்பது தெரிந்தது. தகாத வார்த்தைகளில் திட்டியதால், ஆத்திரமடைந்து கொலை செய்ததாக அவர்கள் கூறினர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.