
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் நியமிக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த நிலையில் தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், ”கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்க மாட்டார்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். தர்ம செல்வனின் இந்த பேச்சிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த ஆடியோ விவகாரம் ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கினார் தர்ம செல்வன். தருமபுரி பெரியார் சிலை அருகே உள்ள தமிழக அரசின் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான டிராவல்ஸ் பங்களாவில் தருமபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, நகர கட்சி நிர்வாகிகள் கூட்டம் கடந்த மார்ச் 6 அன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தர்மசெல்வன் பேசும்போது, “நான் கட்சி கூட்டத்தில் பேசுவதை சிலர் ரெக்கார்ட் செய்து எனக்கு எதிராக செயல்படுகிறீர்கள். அவர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி விடுவேன்” என்று சீறினார்.
இதனால் சூடான நிர்வாகிகள், ”எங்களை நீங்க நீக்குறீங்களா, இல்லை உங்களை நாங்க நீக்குறோமான்னு பார்ப்போம்” என்று தர்மசெல்வனுக்கு எதிராக கோஷமிட்டபடி கூட்டத்தில் இருந்து வெளியேறினர். சொந்த கட்சி நிர்வாகிகளே மாவட்ட செயலாளருக்கு எதிராக வெடித்தது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தர்ம செல்வனை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 18) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.