
மதுரை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில் தான். மதுரை ஊர் முழுக்க கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான்.
ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இக் கோயிலைச் சுற்றித்தான். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் அனைத்தும் கைகூடும் என்பது நம்பிக்கை.
மீனாட்சியம்மனை மணம் புரிவதற்காக, ஈசன் திருமணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார். மீனாட்சியம்மன் அரசியாக இருந்ததால், அவளுக்கான அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். இந்தத் தலத்தின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை இன்று ஏன் அடைக்கப்படுகிறது தெரியுமா?
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று(மார்ச் 18) மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.