
ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவர் வெட்டப்பட்ட வழக்கில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீசார் சிறப்பாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை விரைவாக செயல்பட்டுள்ளது என நெல்லையில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் நேற்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
தொடர்ந்து மாணவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டீன் ரேவதி பாலனிடம் கேட்டறிந்தார். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவரை படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜாதி வெறியோடு கும்பலாக வந்து வெட்டி உள்ளனர்ர இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தென்மாவட்டங்களில் ஜாதி ரீதியான மோதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்ர சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஒரு சில ஆசிரியர்களும் காரணமாக இருக்கின்றனர். இதை நிர்வாகம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மாணவர் வெட்டப்பட்ட வழக்கில் தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீசார் சிறப்பாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் காவல்துறை விரைவாக செயல்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, துணை பொதுச்செயலாளர் சண்முக சுதாகர், மண்டல தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.