
தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இறுதி தேர்வு எப்போது தொடங்கும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. +2 மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி மொழித் தேர்வுடன் தொடங்கியது. +2 மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ஆம் தேதி மொழி தேர்வுடன் தொடங்கியது. இது வரும் மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே மற்ற வகுப்புகளுக்குத் தேர்வு எப்போது தொடங்கி எப்போது முதல் நடைபெறும் என்ற அறிவிப்பைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21ஆம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் முடிகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிகிறது
1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை : ஏப்ரல் 15 தமிழ், ஏப்ரல் 16 மொழிப்பாடம், ஏப்ரல் 17 ஆங்கிலம், ஏப்ரல் 21 கணிதம்
4 மற்றும் 5 ஆம் வகுப்பு: ஏப்ரல் 9 தமிழ், ஏப்ரல் 11 ஆங்கிலம், ஏப்ரல் 15 கணிதம், ஏப்ரல் 16 விருப்ப மொழி, ஏப்ரல் 17 அறிவியல், ஏப்ரல் 21 சமூக அறிவியல்
அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ் தேர்வுடன் தொடங்குகிறது. அது வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.
மேற்கண்ட தேர்வுகளில் 1,2,3 வகுப்புகளுக்கு காண தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 4,5ம் வகுப்புக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். அதன் தொடர்ச்சியாக 6,7 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கும். 8,9 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடத் தேர்வு காலை 10 மணி முதல் 12:30 மணி வரையும், பிறப்பாடங்கள் மதியம் 2 மணி தொடங்கி மாலை 4:30 மணி வரையும் நடக்கும்.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதலும், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.